2019ஆண்டு ஏற்பட்ட கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் மொத்தமாக முடக்கியது. இந்த நிலையில், கொரோனாவை போல வேறு ஒரு வைரஸ் பாதிப்பும் கூட 2025ம் ஆண்டு பெருந்தொற்றாக உருவாக வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
இதற்குத் தயாராகும் வகையில் பிரிட்டன் ஏற்கனவே தடுப்பூசிகளையும் வாங்கி குவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2019 இறுதியில் சீனாவில் முதல்முதலில் கொரோனா வைரஸ் பரவியது. கொரோனா பரவ தொடங்கி 5 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும், இன்னும் அது ஏற்படுத்திய வடு அப்படியே இருக்கிறது.
இதற்கிடையே எந்தவொரு வைரஸ் வேண்டுமானாலும் திடீரென பெருந்தொற்றாக மாறும் ஆபத்து இருந்தாலும், சில வகை வைரஸ்கள் மற்றவற்றைக் காட்டிலும் அதிக ஆபத்தானதாக இருக்கிறது.
அதில் குறிப்பாக இன்ஃப்ளூயன்ஸா A துணை வகை H5N1 வகை ஆபத்தானதாக மாறலாம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள். H5N1 வைரஸ், அதாவது பறவை காய்ச்சலில் ஒரு வகை.
இப்போது காடுகளில் இருக்கும் பறவைகள் மற்றும் வளர்க்கப்படும் கோழி உள்ளிட்ட பறவைகளுக்கு இடையே வேகமாகப் பரவி வருகிறது. மேலும், அமெரிக்காவில் கறவை மாடுகள், மங்கோலியாவில் குதிரைகளையும் கூட இது தாக்கியுள்ளது.
இத்தனை ஆண்டுகள் H5N1 வைரஸ் மனிதர்களைத் தாக்காமல் இருந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இது மனிதர்களையும் தாக்க ஆரம்பித்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 61 பேருக்கு H5N1 வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் பெரும்பாலானோர் பறவை பண்ணைகளில் வேலை செய்தவர்கள் ஆகும். மேலும், இந்த பறவை காய்ச்சல் 30% உயிரிழப்பை ஏற்படுத்துவதும் கவலையளிக்கும் விஷயமாகும்.
கொரோனாவை போல H5N1 வைரஸ் பாதிக்கப்பட்ட நபரில் இருந்து மற்றொருவருக்குப் பரவாது இது பாதிக்கப்பட்ட விலங்கிடம் இருந்து மட்டுமே மனிதர்களுக்குப் பரவக்கூடியது.
உலகின் சில நாடுகள் H5N1 வைரஸ் பெருந்தொற்றாக மாறும் என்பதைக் கணித்து அதற்கேற்ப நடவடிக்கை எடுத்து வருவதுடன், பிரிட்டன் 50 லட்சம் பறவை காய்ச்சல் தடுப்பூசிகளை வாங்கி தயார் நிலையில் வைத்துள்ளது.