ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதும் போட்டியின் போது, ஹர்ஷா போக்லே மற்றும் சைமன் டவுல் வர்ணனை செய்வதற்காக வந்தால் மைதானத்திற்குள் அனுமதிக்க முடியாது என பெங்கால் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
ஈடன் கார்டன் மைதானத்தின் பிட்ச் பராமரிப்பாளர் சுஜன் முகர்ஜியை விமர்சித்து அவர்கள் இருவரும் பேசியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
2025 ஐபிஎல் தொடரில் துவக்கத்தில் இருந்தே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும், ஈடன் கார்டன் மைதானத்தின் பிட்ச் பராமரிப்பாளர் சுஜன் முகர்ஜிக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் தோன்றின.
இந்த நிலையில், வர்ணனையின் போது ஹர்ஷா போக்லே மற்றும் சைமன் டவுல் ஆகியோர் சுஜன் முகர்ஜியை நேரடியாக விமர்சித்த நிலையில், பெங்கால் கிரிக்கெட் சங்கம் கோபமடைந்தது.
இதுகுறித்து பெங்கால் கிரிக்கெட் சங்கம் பிசிசிஐக்கு விளக்கம் அளித்து அறிக்கை அனுப்பியது. அதில், ஐபிஎல் விதிமுறைகளின் படிதான் தாங்கள் மைதானங்களை தயாரித்து வருவதாகவும், எந்த அணிக்கும் பிட்ச் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்வதற்கான உரிமை இல்லை என விதிமுறைகளில் உள்ளதாக கூறியுள்ளது.
தொடர்ந்து, தற்போது ஹர்ஷா போக்லே மற்றும் சைமன் டவுல் தங்களின் மைதான பிட்ச் பராமரிப்பாளரை விமர்சித்ததால் அவர்களை மைதானத்தில் அனுமதிக்க முடியாது என பெங்கால் கிரிக்கெட் சங்கம் குறிப்பிட்டுள்ளது.