சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த மாதம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் இன்று பேரணி நடைபெற்றது.
மதுரையில் இருந்து சென்னைக்கு மகளிரணி செல்லவிருந்த இந்த பேரணிக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.
இந்தநிலையில், மதுரையில் இருந்து பாஜக மகளிர் அணியினர், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரான நடிகை குஷ்பு தலைமை இன்று சென்னைக்கு பேரணியாக புறப்பட்டனர். போலீசார் தடையை மீறி பேரணி தொடங்கியது.
இதையடுத்து, குஷ்பு உள்பட பாஜக மகளிரணியினரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இந்த கைது சம்பவத்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி, பாஜக மகளிரணி சார்பாக நடைபெறும் நீதிப் பேரணியில் கலந்து கொண்ட நிர்வாகிகளை காவல்துறை கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிப்பதாக அவர் பதிவிட்டுள்ளார்.