இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பிரிஸ்பேனில் மோதிய 3ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 445 ரன் குவித்தது.
பின்னர் இந்திய அணி நேற்றைய 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 252 ரன் எடுத்து இருந்தது. கே.எல். ராகுல் 84 ரன்னும், ரவீந்திர ஜடேஜா 77 என்னும் எடுத்தனர். ஜஸ்பிரீத் பும்ரா 10 ரன்னும், ஆகாஷ் தீப் 27 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இந்த டெஸ்டில் 2-ம் நாள் ஆட்டத்தை தவிர எஞ்சிய 3 நாட்களும் மழையால் பாதிக்கப்பட்டது. முதல் நாளில் 13.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. இன்று 5ஆவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது.
193 ரன்கள் பின்தங்கி, கைவசம் 1 விக்கெட் என்ற நிலையில் இந்தியா தொடர்ந்து விளையாடியது. போட்டி தொடங்கிய சிறிது நேரத்தில் கடைசி விக்கெட் சரிந்தது. இந்திய அணி 78.5 ஓவரில் 260 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இது ஆஸ்திரேலியாவின் ஸ்கோரை விட 185 ரன் குறைவாகும்.
ஆகாஷ் தீப் 31 ரன்னில் ஆட்டம் இழந்தார். பும்ரா அதே 10 ரன்னுடன் அவுட் ஆகாமல் இருந்த கடைசி விக்கெட் ஜோடி 47 ரன் எடுத்தது. கம்மின்ஸ் 4 விக்கெட்டும், ஸ்டார்க் 3 விக்கெட்டும், ஹசில்வுட், நாதன் லயன், டிராவிஸ் ஹெட் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
185 ரன்கள் முன்னிலையில் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை தொடங்கிய போது ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. மதிய உணவு இடைவேளை வரை போட்டி மீண்டும் தொடங்கவில்லை. மதிய உணவு இடைவேளைக்கு பிறகு மழை விட்டதும் ஆஸ்திரேலியா 2ஆவது இன்னிங்சை தொடங்கியது.
இந்திய வீரர்களின் அபாரமான பந்து வீச்சாலும் ஆஸ்திரேலிய விக்கெட்டுகள் சரிந்தன. 11 ஓவரில் 33 ரன் எடுப்பதற்குள் அந்த அணி 5 விக்கெட்டை இழந்தது. ஆஸ்திரேலியாவின் விக்கெட்டுகள் சரிந்ததால் இந்த டெஸ்டில் பரபரப்பு ஏற்பட்டது.
டிரெவிஸ் ஹெட் 17 ரன்கள் விளாசி அவுட் ஆனார். அடுத்து கேப்டன் கம்மின்ஸ் அதிரடியாக விளையாடி 10 பந்தில் 22 ரன்களுடன் ஆட்டமிழந்த நிலையில், அலெக்ஸ் கேரி 22 ரன்களுடன் களத்தில் இருந்தார். 18 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 89 ரன்கள் எடுத்த போது ஆஸ்திரேலியா டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.
இதனால் இந்தியாவுக்கு 275 ரன்கள் வெற்றி இலக்காக ஆஸ்திரேலியா நிர்ணயித்த நிலையில், தொடர்ந்து மழை பெய்யதால் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளதுடன், இரு அணிகளுக்கும் இடையேயான 4ஆவது டெஸ்ட் போட்டி வருகிற 26ஆம் தேதி தொடங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.