நியூசிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி, படுமோசமாக தோற்ற நிலையில் பலரும் கடும் விமர்சனத்தை வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில், இந்திய அணி மூன்று போட்டிகளிலும் தோற்றமைக்கு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரை, கடுமையாக சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.
கோலி மற்றும் ரோஹித் இருவரும் துலீப் டிராபியில் பங்கேற்க மறுத்ததுதான், தொடர் தோல்விகளுக்கு முக்கிய காரணம் என கவாஸ்கர் கூறியுள்ளார்.
செப்டம்பர் 5 முதல் 22ஆம் தேதி வரை பெங்களூர் மற்றும் அனந்தபூரில் நடைபெற்ற துலீப் டிராபியில் இந்தியா ஏ, பி, சி, டி ஆகிய அணிகள் பங்கேற்றன.
இத்தொடரில் பங்கேற்க ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இணக்கம் வெளியிட்ட நிலையில், கடைசி நேரத்தில் பங்கேற்க முடியாது எனக் கூறி ஓய்வு எடுத்தனர்.
இதுகுறித்துப் பேசிய கவாஸ்கர், ‘‘இந்த வருட ஆரம்பத்தில் இருந்தே கோலி, ரோஹித் சர்மா இருவரும் டெஸ்டில் சிறப்பாக செயல்படவில்லை. அவர்கள் துலீப் டிராபி, ரஞ்சிக் கோப்பையில் விளையாடி இருக்க வேண்டும். ஈகோதான், அவர்களை உள்ளூர் டெஸ்டில் விளையாட விடாமல் தடுத்தது’’ எனக் கூறினார்.
அத்துடன், ‘‘நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் அவர்கள் விளையாடியதை பார்க்கும் போது அவர்கள் சரியாக பயிற்சி செய்யவில்லை என்பது தெரிகின்றது. இந்திய அணிக்கு விளையாட வேண்டும் என்றால், தீவிரமாக தயாராக வேண்டும். இவர்கள் சிறப்பாக பேட்டிங் செய்திருந்தாலே, இந்தியா வென்றிருக்கும்’’ என்றார.
இந்த வருடத்தில், விராட் கோலி 10 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 192 ரன்களை மட்டும்தான் அடித்துள்ளார். ரோஹித் சர்மா 19 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் களமிறங்கி 533 ரன்களை அடித்துள்ளார்.