இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் அடுத்த மாதம் நடைபெற உள்ள டி20 தொடரில் விளையாட உள்ள நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
அண்மையில் நடந்த வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலகிய சிவம் துபே மற்றும் வேகப் பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் மற்றும் ரியான் பராக் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
வங்கதேச டி20 தொடரில் அறிமுகமாகிய மயங்க் யாதவ் மூன்று சர்வதேச போட்டிகளில் மட்டுமே விளையாடிய நிலையில் அவருக்கு காயம் ஏற்பட்டு உள்ளது. கடந்த ஐபிஎல் தொடரில் மயங்க் யாதவ் நான்கு போட்டிகளில் மட்டுமே ஆடி இருந்த நிலையில், காயம் ஏற்பட்டு அணியில் இருந்து விலகி இருந்தார்.
தற்போது, இந்திய அணியில் வெறும் மூன்று போட்டிகளில் ஆடிய நிலையில், அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், நீண்ட காலம் சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவது சந்தேகம் என்று கூறப்படுகின்றது.
அத்துடன், சிவம் துபேவின் காயம் இன்னும் குணம் அடையாததால் அவரும் தேர்வு செய்யப்படவில்லை என்பதுடன், அவருக்கு பதிலாக வங்கதேச டி20 தொடரில் விளையாடிய நிதிஷ் குமார் ரெட்டி, ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
இதனையடுத்து, வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக ஹர்திக் பாண்டியா மட்டுமே டி20 அணியில் இடம் பெற்று உள்ளதுடன், நீண்ட காலமாக வலது தோள்பட்டையில் ரியான் பராக்கிற்கு காயம் இருந்து வருவதால், அதை சரிப்படுத்த பிசிசிஐ சிறப்பு மையத்துக்கு அவர் அனுப்பப்பட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் அவர்கள் மூவரும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் இணைக்கப்படவில்லை என பிசிசிஐ விளக்கம் அளித்து இருக்கிறது.